திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் பகுதியில் அரசு உதவிபெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 17) காலை 10.50 மணியளவில் இடைவேளை விட்ட நேரத்தில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக கழிவறைக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென கழிவறையின் முகப்புப் பகுதியில் இருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. கழிவறைக்கு அருகிலிருந்த சக மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.
இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறை, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்தசென்ற மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த இடிபாடுகளில் சிக்கி எட்டாம் வகுப்பு பயிலும் விஸ்வரஞ்சன் என்ற மாணவனும், ஒன்பதாம் வகுப்பு பயிலும் அன்பழகன் என்ற மாணவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சுதிஸ் என்ற மாணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
அறிக்கை அளிக்க உத்தரவு
மேலும் காயமடைந்து நான்கு மாணவர்களுக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவர்கள் உயிரிழந்த துயரச் செய்தி கேட்டு பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் கதறி அழுதனர்.
பள்ளி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்பறையில் உள்ள பொருள்களை அடித்து உடைத்தனர். விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன், துணை ஆணையர் சுரேஷ்குமார், உயர் அலுவலர்கள் பள்ளிக்கு விரைந்துசென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி முதன்மை கல்வி அலுலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழிசை ட்விட்டர் பதிவு
முன்னதாக இரண்டு மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டர் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை - பொன்முடி தகவல்