திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் 500 கூடுதல் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் விரைவில் அமைக்கப்படும். மாவட்ட கட்டுப்பாட்டு அறை மூலமாக கிராமப்புறங்களில் தொற்று குறித்து கண்காணிக்கப்படுகிறது.
நெல்லையில் நேற்று மட்டும் 2,800க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர். செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அதனை எதிர்பார்த்து காத்து இருக்காமல் 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்க உலகளாவிய அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஜூன் 6ஆம் தேதி இந்த டெண்டர் திறக்கப்பட்டு விரைவில் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் இதுவரை 256 பேர் கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் மருத்துவரிடம் ஆலோசனை நடத்தி கறுப்பு பூஞ்சை நோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கரோனா மரணங்களை அரசு மறைக்கவில்லை. ஒரு இழப்பைக்கூட மறைக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மரணங்கள் மறைக்கப்படுவதாக வெளியான தகவல் தவறானது.
முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் அந்தத் திட்டத்தில் நோயாளிகளை அனுமதிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கை முறையாக கடைப்பிடித்தால் உயிரிழப்பு என்பது இருக்காது. எனவே, அனைத்து மக்களும் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அரசு மருத்துவமனை, வள்ளியூர் தனியார் பள்ளியில் தடுப்பூசி முகாம், சிறுமளஞ்சி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்புப் பணிகள், தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இதையும் படிங்க: ’தடுப்பூசிகள் உற்பத்திக்கு ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்துக்கு நிதி ஒதுக்குக’ - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை