திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கெளதமபுரி கிராமத்தில் பட்டமுத்து என்பவரை 1998ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த பச்சாத்து(72) என்பவர் கொலை செய்தார்.
இவர் கொலை செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டதால், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து பச்சாத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு காலத்தில் பிணையில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் மேல்முறையீடு தீர்ப்பிலும் அவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
கைதான குற்றவாளி
இதனால், பச்சாத்து கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழாவில் தனது பெயரை மாணிக்கம் என்று மாற்றி தலைமறைவாகி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று (ஆக. 29) தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இச்செய்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவலாக கிடைத்தது.
அதன்பேரில், அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் அறிவுறுத்தலின் பேரில் காவல் ஆய்வாளர் சந்திர மோகன், ராமர் பெருமாள், சண்முக பாண்டியன் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளியைப் பிடிப்பதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பாச்சாத்தை தனிப்படை காவலர்கள், கையும் களவுமாகப் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த குற்றவாளியைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்ட தனிப்படை காவலர்களை, காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் வெகுவாகப் பாராட்டினார்.
இதையும் படிங்க: 'தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!'