நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த குப்பன்னாபுரம் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் மகேஷ் (22). இவர் நண்பர்களுடன் வெளியில் செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், வீட்டிற்கு திரும்ப வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் ஒருபுறம் தேடல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், மானூர் அருகே ஒரு கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் இளைஞரின் சடலத்தை கைப்பற்றினர்.
காவல் துறையினர் மேற்கொண்டு நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் காணாமல்போன மகேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து மகேஷ் உடல் உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், மகேஷ் தனது நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மகேஷ் உயிரிழப்பில் வேறு எதாவது காரணம் இருக்கிறதா? என அவரது நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:பப்ஜி விளையாட்டை மறக்க முடியாமல் சிறுவன் தற்கொலை