திருநெல்வேலி: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஒன்பது பேர் விடுவிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரத்தை அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்ற கார் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி 15 பேரை கைது செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக, குற்றம் சாட்டப்பட்ட 15 பேரையும் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். அதனை அடுத்து, வழக்கு விசாரணை திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், நீதிபதி பத்மநாபன் நேற்று (அக் 04) தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில், "குற்றம் சாட்டப்பட்ட 15 நபர்களில் மூன்று பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த சிவா என்ற சிவலிங்கம், இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள பானாங்குளத்தைச் சேர்ந்த தங்கவேல், மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ராமையன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் ஆகிய மூன்று பேரும் இந்த சம்பவத்தில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளனர். எனவே அவர்களுக்கு ஆயுள் தண்டனையும். ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்த நீதிபதி, மீதமுள்ள 9 பேரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேற்று (அக்.4) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்த நிலையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற இந்த சம்பவம் நடைபெற்று 19 ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே பேசுபொருளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லியோ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்… டிரைலருக்கான ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!