தேனி மாவட்டம் போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன்(29). இவர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை போடி நகர காவல்நிலையத்தில் நவம்பர் 1ஆம் தேதி புகார் அளித்தார்.
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, போடி அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த மினி சரக்கு வாகன ஓட்டுர் விஜயராஜ்(30) என்பவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். விஜயராஜ் அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கின் திருப்பமாக காணாமல் போன கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
விஜயராஜின் மனைவி திவ்யா(25) தேனியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தன்னுடன் பணிபுரியும் சக ஊழியரான கோபாலகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த விஜயராஜ் திவ்யாவை கண்டித்துள்ளார். இதையடுத்து, விஜயராஜின் நண்பர்களான மகேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர் கோபாலகிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் அவரது செல்ஃபோனை பறித்துக் கொண்டு வந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி செல்ஃபோனை வாங்குவதற்காக விஜயராஜின் வீட்டிற்கு சென்ற கோபாலகிருஷ்ணனை அவர் மினி சரக்கு லாரியில் ஏற்றிக்கொண்டு நண்பர்களான மகேஸ்வரன், சீனிவாசன் ஆகியோரையும் அழைத்துச் சென்றுள்ளார். போடியை அடுத்துள்ள குண்டல்நாயக்கன்பட்டி பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது கயிறால் கோபாலகிருஷ்ணனின் கழுத்தை இறுக்கி விஜயராஜ் கொலை செய்து, பின்னர் பாலார்பட்டியில் உள்ள முல்லை ஆற்றில் வீசியதாக தெரியவந்தது.
இதனையடுத்து, போடி நகர் காவல் துறையினர் விஜயராஜ், மகேஷ்வரன், சீனிவாசன் ஆகியோர் மீது கொலை செய்யும் நோக்குடன் ஆள் கடத்தல், கொலை செய்தல், தடயத்தை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயராஜை கைது செய்தனர். மற்ற இரண்டு பேரையும் வலைவீசிதேடி வருகின்றனர்.
மேலும் ஆற்றில் வீசப்பட்ட கோபாலகிருஷ்ணனின் சடலத்தையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவியுடன் பேசி பழகி வந்தவரை கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பல ஆண்களுடன் தொடர்பு: தூத்துக்குடியில் பெண் எரித்துக் கொலை