தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் உள்ள ஒத்தவீடு கரட்டு பகுதியில் ஆண் சடலம் ஒன்று முற்றிலும் எரிந்த நிலையில் கிடந்தது. இதையறிந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான காவல்துறையினர், எரிந்தநிலையில் கிடந்த உடலை ஆய்வு செய்தனர்.
இதில், உயிரிழந்தவர் சுமார் 25 முதல் 30 வயதுடைய நபர் என்றும், உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறையினருக்கு தெரிய வந்தது. தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கைரேகைப் பதிவுகள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதன் பின்னர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார்.
உயிரிழந்தவர் முற்றிலும் அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனவர்கள் அடிப்படையில் விபரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெயமங்கலம் காவல்துறையினர் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சொத்து விவகாரம்: மனைவி, மகளைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர்