தேனி மாவட்டம், பெரியகுளம் வாகம்புளித்தெருவைச் சேர்ந்தவர்கள் அஜித்- அமீனா பேகம் தம்பதியினர். கடந்த 2014ஆம் ஆண்டு, இவர்களது மகள் ரோஸ் (எ) அஸ்மியா பானு (19)விற்கும், அப்பகுதியைச் சேர்ந்த மஜித் என்பவரது மகன் யாசர் அராஃபத்திற்கும் (30) திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த சில நாட்களில் இளம்பெண் அஸ்மியா பானு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான், தங்களது மகள் தற்கொலை செய்து கொண்டதாக, அஸ்மியா பானுவின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர், யாசர் அராபத், அவருடைய தாய் ராபியா பேகம் (50), சகோதரர் ரியாஸ் அகமது (35) மற்றும் சகோதரி ஜெனிபர் பாத்திமா (27) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு தேனி மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கீதா, உயிரிழந்த பெண்ணின் கணவர் யாசர் அராபத்திற்கு ஆயுள் தண்டனையும், அவரது மாமியார் ராபியா பேகம் உள்ளிட்ட உறவினர்கள் மூவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் இன்று தீர்ப்பளித்தார்.
மேலும், உயிரிழந்த அஸ்மியா பானுவின் குடும்பத்திற்கு, தமிழ்நாடு அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும், நீதிபதி உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பை அடுத்து குற்றவாளிகள் நான்கு பேரையும், மதுரை மத்திய சிறையில் அடைக்கத் தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நடுத்தெருவில் விட்ட மகன் - ஆட்சியரின் உதவியோடு சொத்துகளை மீட்ட மூதாட்டி