தேனி மாவட்டம் அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ஜெய் ஜஸ்வந்த் (10). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயது முதல் நீச்சலில் இருந்த ஆர்வத்தினால் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
தொடர்ந்து பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் சிறுவனின் திறமையை அறிந்த பயிற்சியாளர் விஜயகுமார் உலக சாதனை புரிவதற்காக சிறுவனைத் தயார் படுத்தினார்.
அதன்படி இலங்கையில் இருந்து இந்தியா வரை உள்ள 28 கிலோ மீட்டர் தூரத்தை 10 மணி 30 நிமிடத்தில் கரையை கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் குற்றாலீசுவரன் 16 மணி நேரத்தில் புரிந்த சாதனையை தற்போது இச்சிறுவன் தகர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சொந்த ஊரான தேனிக்கு வந்த சிறுவன் ஜெய் ஜஸ்வந்திற்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் துவங்கி தொடர்ந்து மதுரை சாலையில் பங்களாமேடு வழியாக வந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை சந்திப்பு வரை பேன்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக சிறுவன் அழைத்து வரப்பட்டார். வழிநெடுகிலும் இருந்த பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என அனைவரும் சிறுவனுக்கு ஆரத்தி எடுத்தும்,பொன்னாடை போர்த்தியும், மாலை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர்.