தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் ஆத்துகாட்டை சேர்ந்தவர் சோலைமலை. அவரது தம்பி ராஜாங்கம். அண்ணன் - தம்பி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சொத்து பாகப் பிரிவினையின் போது சோலைமலை பயன்படுத்தி வந்த பொதுப்பாதை தம்பியின் நிலத்தில் பிரிந்துள்ளது. அந்த பாதை யாருக்கு சொந்தம் என இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தோட்டத்தில் தனியாக வேலை பார்த்த ராஜாங்கத்தின் மனைவி அனுச்சியம்மாளை, சோலைமலையும் அவரது மனைவி செல்வக்கனியும் சேர்ந்து மண்ணெண்னை ஊற்றி எரித்துள்ளனர். அப்போதும் உயிர் போகாததால் அருகே இருந்த கிணற்று தொட்டியில் உள்ள நீரில் அழுத்தி கொலை செய்த பின்பு, இறந்த அனுச்சியம்மாளை அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கடமலைகுண்டு காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளான சோலைமலை மற்றும் செல்வக்கனி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் காவலர்கள் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
அத்னபடி, பெண்ணை கொலை செய்த குற்றத்திற்காக தம்பதியினர் சோலைமலை மற்றும் செல்வக்கனி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும், தடயத்தை மறைத்தற்காக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கீதா தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் வியாபாரி சுட்டுக்கொலை: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி