தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தேனி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. தேனி அருகே பழனிசெட்டிப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, ரூ.4.51கோடி மதிப்பிலான தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள், விலையில்லா மிதிவண்டிகள், மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி என 10,954 பயனாளிகளுக்கு வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “ அரசியல் கட்சி தொடங்குவதாக ரஜினி முதலில் அறிவித்ததும், அவருக்கு ஜனநாயக ரீதியில் வாழ்த்து தெரிவித்து வரவேற்றேன். ஆனால் தற்போது உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்குவதை கைவிடுவதாக ரஜினி அறிவித்துள்ளதையும் வரவேற்கிறேன். அவர் பூரண உடல் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்.
உரிய நேரத்தில், உரிய இடத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்குவேன். என்னால் அதிமுக உடையப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். அவரது ஆசை நிறைவேறாது “ என்றார். இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ரஜினி போல் கமலும் அரசியலிலிருந்து விலகுவார்! - புகழேந்தி ஆரூடம்!