தேனி: கணவரின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, மது போதையில் ஏற்பட்ட பிரச்சினையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி நாடகமாடிய மனைவியை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஜீவா நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 47). வண்ணம் பூசும் தொழிலாளியான இவர் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் தனது மனைவி கிருஷ்ணவேணியுடன் வசித்து வருகிறார். இவர்களது மகன் கார்த்திக் போடியில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.
தீபாவளி பண்டிகைக்காக ரமேஷ் மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி இருவரும் போடிக்கு வந்துள்ளனர். தீபாவளி முடிந்ததும், மகன் கார்த்திக் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, போடி நகர் காவல் நிலையத்திற்கு அவரது மனைவி கிருஷ்ணவேணி தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரமேஷின் தோள் பட்டை மற்றும் கழுத்துப் பகுதிகளில் நகக்கீரல்கள் காயங்களுடன் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, ரமேஷின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து இறந்த ரமேஷின் தாயார், தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக போடி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்நிலையில், ரமேஷின் உடற்கூராய்வுக்கான அறிக்கை வெளியானது. அதில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்யவில்லை என்றும், அவரது கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் ரமேஷின் மனைவி கிருஷ்ணவேணியை தொடர்ந்து விசாரித்து வந்தனர். விசாரணையில், கிருஷ்ணவேணி, தனது கணவர் மது போதையில் ஏற்பட்ட பிரச்சினையில தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் நான் போலீசாருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தேன் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் சந்தேகமடைந்த போலீசார் கிருஷ்ணவேணியிடம் உண்மை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். அதில், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரமேஷூக்கும், அவரது மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணவேணி மது போதையில் இருந்த கணவரின் கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, கணவரை தூக்கிலிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதனையடுத்து, போடி காவல்துறையினர், மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து, கணவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி கிருஷ்ணவேணியை கைது செய்தனர். இச்சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி பொதுமக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு!