தேனி மாவட்டம் போடியில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி எஸ்டேட் மணி என்பவர் போடி அருகே பொட்டல்களம் ஊரில் கௌர் மோகன்தாஸ் என்பவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போடி புறநகர் காவல் துறையினர் அங்கு சென்றனர்.
அப்போது வீட்டில் கௌர் மோகன்தாஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பதுங்கியிருந்தனர். அவர்களை சுற்றி வளைக்க காவல் துறையினர் முற்படுகையில், அனைவரும் தப்பி ஓடியுள்ளனர்.
கௌர் மோகன்தாஸ் மட்டும் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கோண்ட விசாரணையில், கொள்ளையடிக்க திட்டமிடப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் இருந்து இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு ஏ.கே. 47 டம்மி துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன் மாடல் டம்மி துப்பாக்கி, ஒரு நாட்டு டம்மி துப்பாக்கி, கத்திகள், வாள்கள், ஈட்டிகள், கார், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், மிரட்டுவதற்கு பயன்படுத்தக் கூடிய டம்மி துப்பாக்கிகள் எனத் தெரிவித்தனர். மேலும் தப்பியோடிய மற்ற குற்றவாளிகளை பிடிப்பதற்கு சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருவதாகக் கூறினர். துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.