தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள 30க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில், பணிபுரியும் நெசவாளர்கள், வீடுகளில் சிறு விசைத்தறிக் கூடங்களில் இயக்கும் நெசவாளர்களுக்கு இரண்டாண்டிற்கு ஒரு முறை உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய ஒப்பந்தத்தை தொடர்ந்துள்ள நிலையில், இரண்டாண்டிற்கு 50 விழுக்காடு கூலி உயர்வு, 20 விழுக்காடு போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நெசவாளர்கள் உற்பத்தியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் நூல் விலை உயர்வை காரணம் காட்டி கூலி உயர்வை உற்பத்தியாளர்கள் ஏற்க மறுத்ததால் ஜனவரி 1 முதல் நெசவாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஒரு சில உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களுக்கு 13 விழுக்காடு கூலி உயர்வும், ஒப்பந்த அடிப்படையில் சேலைகள் உற்பத்தி செய்யப்படும் தொழிலாளர்களுக்கு 10 விழுக்காடு கூலி உயர்வும் வழங்க முன் வந்ததால் சம்பந்தப்பட்ட விசைத்தறி கூடங்கள் மட்டும் சில நாட்கள் செயல்பட்டன. ஆனால் இதனை மற்ற உற்பத்தியாளர்கள் ஏற்காததால் ஒட்டு மொத்தமாக மீண்டும் அனைத்து விசைத்தறிக் கூடங்களும் அடைக்கப்பட்டன.
இந்நிலையில், நெசவாளர்களின் கூலி உயர்வு ஒப்பந்தத்தை உற்பத்தியாளர்கள் ஏற்கக்கோரி இன்று(ஜன.28) ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல்துறையினர் கேட்டதற்கு இனங்க அங்கிருந்து கிளம்பி ஏசு கி.மீ தூரம் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். இதில் அண்ணா தொழிற்சங்கம், பாஜக, திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நெசவாளர்களிடம் ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நாளை (ஜன .28) விசைத்தறி உரிமையாளர்களை அழைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு நெசவாளர்கள் கலைந்துச் சென்றனர்.
இதுகுறித்து நெசவாளர்கள் மற்றும் தொழிற் சங்கத்தினர் கூறுகையில், நாளை (ஜன.29) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், சாலை மறியல் போராட்டம், விசைத்தறி உரிமையாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அரசு அலுவலர்களும் ஏமாற்றி வருகின்றனர். பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றாலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் இன்று திறக்கப்படுகிறது - பொதுமக்கள் பார்வைக்கு தடை