தேனி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். தேனி வடக்கு மாவட்ட சார்பில் போடி, பெரியகுளம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் பரப்புரை செய்துவரும் அவர், அப்பகுதிகளில் உள்ள அம்பேத்கர், வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்கத் தேவர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொகுதியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”மோடிக்கு யார் சிறந்த அடிமை என ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே போட்டி நிலவும் நிலையில், தற்போது மத்திய அமைச்சர் பதவி பெறுவதற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ஆருக்கிடையே கடும் போட்டியே நிலவுகிறது. மோடி அரசு அவசர அவசரமாக தாக்கல் செய்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என நாடுமுழுவதும் எதிர்ப்பு இருந்தவேளையில், அச்சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்தவர்தான் ஓ.பி. ரவீந்திரநாத்.
இதேபோல், இஸ்லாமியர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாகவும் அவர் வாக்களித்துள்ளார்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், குரங்கணி-டாப் ஸ்டேஷன் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்யப்படும் உள்ளிட்ட போடி தொகுதியின் பிரச்னைகள் தீர்ப்பதோடு மட்டுமல்லாது, ஓ.பி.எஸ்ஸின் குடும்பம் சம்பாதித்துள்ள சொத்துக்களை மீட்டு பொதுமக்களிடமே வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: 'காகித பூ' கூட மலரும் திமுக ஆட்சி மலராது: செல்லூர் ராஜூ