தேனி மாவட்டத்தில் உள்ள நதிகளில் முக்கியமான வராக நதி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பெரியகுளம் நகரின் மத்தியில் பாய்ந்தோடி வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், வழியாகச் சென்றடைந்து வைகை அணையில் கலக்கின்றது. பெரியகுளம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர், பாசனம் நிலத்தடி நீர்மட்டத்தின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது.
இந்த வராக நதி நாளடைவில் குப்பை, சாக்கடை, ஆலைக் கழிவுநீர் உள்ளிட்டவைகளால் மாசடையத் தொடங்கியது. இதனைச் சீரமைத்து மாசுத் தொல்லையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக இயற்கை, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் வராக நதி மேம்பாட்டுத் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று (செப்.4) நடைபெற்றது.
'வராக நதியை காப்போம்! வற்றாமல் தடுப்போம்! நதியில் நனைவோம்!' என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார் பங்கேற்றுப் பேசினார்.
முன்னதாக வராக நதியின் தற்போதைய நிலையை விவரிக்கும் காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய ஓபிஆர், பெரியகுளம் நகரின் நடுவே ஓடும் இந்த நதியில் நீர் செல்லாத நேரத்தில் அண்ணா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தியதைச் சுட்டிக்காட்டி நினைவுகூர்ந்தார்.
அவ்வளவு சிறப்புடைய இந்த நதியை பாதுகாக்க தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்புடன் இணைந்து மீட்டெடுத்து காப்போம் எனச் சூளுரைத்த அவர், அதற்குண்டான முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள், விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் தியாகராஜன், தேனி ஆவின் தலைவர் ஓ. ராஜா, பெரியகுளம் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ரோட்டரி சங்கம், பசுமைத் தோழர்கள் அமைப்பு, தன்னார்வலர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்...!