தேனி: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக 534 கன அடி நீர் கேரள பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது கூடுதலாக 8 மதகுகள் வழியே 1870 கன அடி நீர் திறந்தி விடப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் (ஆகஸ்ட் 4) நேற்று இரவு 136 அடியை எட்டிய போது முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கடந்த காலங்களை போல் இரவில் நீர் திறப்பதை தவிர்க்குமாறு தமிழ்நாட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் நேற்று கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) மதியம் 137.50 அடியை எட்டியதை தொடர்ந்து V2,V3,V4,V5,V6,V7,V9,V10 ஆகிய 8 மதகுகள் வழியாக கேரளா பகுதிக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கேரளா பகுதியான வல்லக்கடவு, பீர்மேடு, சப்பாத்து, ஐயப்பன் கோயில் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோசி அகஸ்டின் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார். இதனை தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகமாகும் போது மேலும் சட்டர்கள் திறக்கப்பட்டு அதிக அளவில் நீர் திறக்கப்படும் என்ற சூழலில் வல்லக்கடவு, பீர்மேடு, சப்பாத்து, ஐயப்பன் கோயில் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை குழு, தீயணைப்பு துறையினர், நீர்வளத் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்!