தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்றுவருகிறது. முல்லைப்பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இவ்விளை நிலங்களுக்கு, ஆண்டுதோறும் முதல்போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.
இந்தாண்டு அணைநீர்மட்டம் மே மாதத்தில் பெய்த மழையின் நீர்வரத்தால் 132 அடிக்கு குறையாமல் இருந்து வருகின்ற நிலையில், ஜூன் முதல் தேதியில் பெரியாறு அணையிலிருந்து முதல்போக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று (ஜூன் 01) முதல் 120 நாள்களுக்கு அணையின் நீர் இருப்பிற்கு ஏற்றார்போல் தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களுக்கு முதல்போக சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி வீதமும் மொத்தம் விநாடிக்கு 300 கன அடி வீதமும், தண்ணீர் திறந்துவிட அரசு ஆணை வெளியிட்டது.
இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தேக்கடியில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகேவுள்ள சுரங்க வாய்க்கால் ஷட்டர் பகுதியில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 850 கன அடி நீர் திறப்பு!