தேனி: சங்ககோணம்பட்டி கிராமத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடுகாட்டிற்குச் செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கப் பாலம் இல்லாததால், உயிரிழந்தவர் உடலைச் சுமந்து கொண்டு ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து சென்று அடக்கம் செய்யும் அவல நிலை இருப்பதாகப் பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டத்தில் உள்ள நாகலாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டு சங்ககோணம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வரும் நிலையில், அக்கிராமத்தில் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதற்குப் பல இன்னல்களைச் சந்திப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊர்மக்கள் கூறுகையில், சங்ககோணம்பட்டி கிராமத்தின் நடுவே வைகை ஆறு கடந்து செல்கிறது. இந்த ஆற்றைக் கடந்து தான் சங்கோணம்பட்டி கிராம மக்கள் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யவும், விவசாயம் மேற்கொள்ளவும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களை இழந்த வலியை விட அவர்களை அடக்கம் செய்யும் வலி தான் பெரிதாக உள்ளது.
மேலும், உயிரிழந்த நபர்களை ஆற்றங்கரையோரம் கொண்டு வந்து, இரண்டு லாரி டியூப்களில் காற்றடித்து உயிரிழந்தவர்களின் உடலை அதில் கட்டி, உடலைத் தூக்கிச் சென்று ஆற்றைக் கடந்து இடுகாடு பகுதியை அடையும் நிலை இருந்து வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் அதிகம் வருவதால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது.
வாழும் போது பல கஷ்டங்களை அனுபவிக்கும் நிலையில், உயிரிழந்த பிறகாவது நிம்மதியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இங்கே அடக்கம் செய்வதற்குக் கூட நாங்கள் பல துன்பங்களை அனுபவிப்பதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், ஆற்றைக் கடந்து விவசாயம் செய்ய வேண்டிய சூழல் இருப்பதால், ஐந்தாயிரம் ஏக்கர் நிலம் விவசாயம் செய்யாமல் அழிந்து போகும் நிலையில் இருந்து வருகிறது.
தொடர்ந்து, காலம் காலமாக இறந்தவர்களை அடக்கம் செய்து வரும் இடத்தை விட்டு விட்டு, வேறு இடத்தில் அரசு எங்களுக்குச் சுடுகாட்டைத் தந்துள்ளது. தேர்தலின் போது வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள், வெற்றி பெற்றவுடன் முதல் வேலையாகப் பாலம் கட்டிக் கொடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், அதன் பிறகு எங்கள் பகுதியைக் கண்டுகொள்ளாமல் போய்விடுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை தேனி மாவட்ட ஆட்சியரிடமும், அரசு அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, அப்பகுதியில் ஆற்றின் முன்பாகவே இடுகாடு கட்டிக் கொடுத்திருப்பதாகவும் அதைப் பயன்படுத்தாமல் இருப்பதாகக் கூறுகின்றனர்”.
சங்ககோணம்பட்டி கிராமத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்குக் கிராமத்திலிருந்து சுடுகாட்டிற்குப் பாலம் அமைத்துத் தர வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் கோரிக்கையாக இருக்கின்றது.
இதையும் படிங்க: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்திய மகளிர் சாம்பியன்! ஜப்பானை வீழ்த்தி தங்கம் வென்றனர்!