தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள தர்மாபுரி கிராமத்தில் அரசு மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் தர்மாபுரி மல்லையகவுன்டன்பட்டி சாலையில் அமைந்துள்ள இந்த மதுபானக் கடையில் நேற்று மதுபானம் வாங்கிக் கொண்டு வெவ்வேறு இரு சக்கர வாகனங்களில் வந்த இருவர் அதே பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானர்கள்.
இதில் தர்மாபபுரியைச் சேர்ந்த மலைச்சாமி(40), கோட்டூர் மார்டின் (20) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் தர்மாபுரியில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தேனி வட்டாட்சியர், பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், மதுபானக்கடை தங்கள் கிராமத்தில் இருப்பதால் தான் அருகாமையில் இருப்பவர்கள் அதிவேகமாக மதுபான வாங்கிச் செல்லும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகக் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
எனவே தங்கள் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கோரிக்கை விடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில், யாவரும் கூட்டமாக வெளியே வரவேண்டாம் என்று அறிவித்திருந்த நிலையிலும், எதையுமே கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் சம்பந்தபட்ட மதுபானக்கடையை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளதாக தேனி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் அளித்த உறுதி மொழியை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் மதுபானக்கடையை அகற்றக் கோரி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒரே இடத்தில் கூடி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகியை தாக்க முயன்ற திமுக எம்எல்ஏ: 'சிசிடிவி' காட்சி வைரல்!