தேனி: கேரள மாநிலம், மூணாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (ஜூன் 7) இறங்கிய சக்க கொம்பன் யானை (ChakkaKomban Elephant) சாலையோர கடைகளை அடித்து நொறுக்கியதால் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நேற்றிரவு 11 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி அங்கிருந்த கடைகளை அடித்து துவம்சம் செய்த சக்க கொம்பன் யானை அப்பகுதியிலேயே சுற்றி திரிந்ததால், நீண்ட நேரமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அரிக்கொம்பன் மற்றும் சக்க கொம்பன் ஆகிய யானைகள் ஒன்றாக சின்னகானல் பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், தற்போது அரிக்கொம்பன் யானை தமிழக பகுதியில் விடப்பட்டுள்ளது.
அரிக்கொம்பன் யானையை இடம்பெயர்த்து கொண்டு சென்றதிலிருந்து, சக்க கொம்பன் யானை மூணாறில் உள்ள சின்னகானல் பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்துடனே இரவு நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: “அரிக்கொம்பனை பிடித்த அரிசி ராஜா” ஒரு ரவுடி போலீஸ் ஆன கதை!
குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னக்கானல் பகுதியில் உலா வந்த சக்க கொம்பன் யானை தாக்கியதில் அங்குள்ள காலனியை சேர்ந்த குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். தலை மற்றும் கை, கால்களில் காயமடைந்த குமார், மூணாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதேபோல கடந்த மாதம் சக்க கொம்பன் யானை மீது கார் மோதியதில் யானைக்கு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ளும் பயணிகள் சாலையில் வரும் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எவ்விதமான தொந்தரவும் அளிக்க வேண்டாம் எனவும், அவற்றின் அருகில் செல்வதோ அல்லது அவைகளுடன் புகைப்படம் எடுக்க முயற்சிப்பதோ வேண்டாம் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அரிக்கொம்பனின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், அடுத்ததாக இந்த சக்க கொம்பன் யானையின் தாக்குதலுக்கு ஆளாக நெரிடுமோ? என்று அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். இதனையடுத்து, இவ்வாறு சாலைகளுக்கு யானை வந்து செல்வதைத் தடுக்க வனத்துறை யானைகளின் வலசை பகுதிகளில் உள்ள இடையூறுகளை கண்டறிந்து அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது. இதனிடையே, மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வந்து கடைகளை சக்க கொம்பன் அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: Arikomban Elephant:'ஆட்கொல்லி அரிக்கொம்பன் வேண்டாம்' கம்பத்தை கதிகலங்க செய்த யானையை நெல்லைவாசிகள் எதிர்ப்பது ஏன்?