தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் என மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் நேற்றிரவு கனமழை பெய்தது. மழையின் அளவு சராசரியாக 13.9மி.மீ என பதிவாகியது. இவற்றில் சோத்துப்பாறை அணையில் 40.0மி.மீ, பெரியகுளத்தில் 83.0மி.மீ மழை அளவு பதிவாகியிருந்தது.
இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள சோத்துப்பாறை அணை, கல்லாறு, அகமலை, கும்பக்கரை அருவி உள்ளிட்ட பல இடங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
126அடி உயரம் கொண்ட சோத்துப்பறை அணை ஏற்கனவே நிரம்பி வழிகின்ற நிலையில், தற்போதுள்ள நீர்வரத்தான 305கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதேபோல கும்பக்கரை அருவி, கல்லாறு, செலும்பாறு உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏற்பட்ட நீர்வரத்தால், பெரியகுளம் நகரின் மத்தியில் செல்லக்கூடிய வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரை புரண்டு ஓடுகின்றது.
இதனால் பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட வராக நதியின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வராக நதியில் அதிகளவு தண்ணீர் செல்வதால், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என பொதுப்பணித் துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு