தேனி: பெரியகுளம் அருகே கவிப்பேரரசு வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகபட்டியில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக கல்வி நிதி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற வைரமுத்து அவர்களின் தேனி மாவட்டத்தில் அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் 12ஆம் வகுப்பு முடித்த ஓரளவிற்கு நல்ல மதிப்பெண்களை எடுத்து ஏழ்மை நிலையால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றார்.
அதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளை சார்பாக 8 மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வைரமுத்து, கல்வி நிதியாக மாணவ மாணவியருக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில், வைரமுத்து பேசியதாவது ”மைக்ரோசாப்ட் வாழ்க்கையை அமெரிக்கா கற்றுக் கொடுக்கும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு உள்ளூர் வாழ்க்கையை, உள்ளூர் பண்பாட்டை, உள்ளூர் கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். நேர்மையை மதிப்பதும் அறிவை கொண்டாடுவதும் தான் தமிழனின் பூர்வ குணம்.
10 வயது இளைஞர்கள் குடிப்பதற்கு அரசாங்கம் பொறுப்பாகாது. ஒழுக்கம் என்பது புறச்சூழல்களால் மட்டும் அமைவதில்லை. அகச் சூழலால் அமைவது ஒழுக்கம் என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் கற்றுக் கொடுக்க வேண்டும். கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் குடியின் பெருக்கம் மனித வாழ்வை தின்று கொண்டிருக்கிறது. மேல்நாட்டில் மதுவை குடிக்கிறான் நம் நாட்டில் மது மனிதனைக் குடிக்கிறது. நான் அரசாங்கத்திற்கு விரோதமாகவோ சார்பாகவோ பேசவில்லை.
மதுவுக்கு விரோதமாகவும் சமூகத்திற்கு சார்பாகவும் பேசுகிறேன். தமிழ்நாட்டில் 14.6% மக்கள் குடிக்கிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. 2004இல் தமிழ்நாடு அரசின் மது விற்பனை 3649 கோடி ரூபாய், 2023 ஆண்டில் 44 ஆயிரம் கோடி ரூபாய், மதுவால் சிறுவர்கள் அனைவரும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
40 வயதிற்கு மேல் ஆட்களை காணவில்லை, புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும், இருக்கும் தலைமுறையை விட வளரும் தலைமுறையின் மீது எனக்கு அக்கறை அதிகமாக உள்ளது. தமிழர்களின் மனித வளம் அபாரமானது, மதுவால் தமிழர்களின் மனித வளம் குறைந்து விடக்கூடாது என்று வருத்தப்படுகிறேன்.
இந்த குடிப் பழக்கம் தான் விபத்துகளுக்கும், தற்கொலைக்கும் காரணம். இந்தியாவிலேயே தமிழ்நாடு தற்கொலை மாநிலமாக இருப்பதும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று கூறிய வைரமுத்து மாணவ, மாணவிகளை பார்த்து தன்னம்பிக்கையோடு வளர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் என் அறக்கட்டளை வளர தென் மாவட்டங்கள் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அறக்கட்டளை மூலமாக கல்வி உதவித்தொகை வழங்குவேன். எனக்கு பின்பும் என் மகன்கள் இந்தப் பணியை தொடர்வார்கள்” என கவிஞர் வைரமுத்து பேசினார்.
இதையும் படிங்க: ஜமீன்தாரின் வாரிசுகள் என கூறும் இருதரப்பினருக்கிடையே மோதல்:தேனியில் பரபரப்பு!