வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தற்போது அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த உயரம் 71 அடியாகும்.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66.01 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து வைகை வடிகால் நிலப்பகுதி கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் வகையில் அபாய ஒலி ஒலிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கரையோரம் உள்ள மக்களும், தாழ்வான பகுதியில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டும் போது இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியதும் மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறக்கப்படும்.
தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் இந்தாண்டில் முதன்முறையாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.