தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடி ஆகும். தற்போது இந்த அணைக்கு முல்லைப்பெரியாறு, மூலவைகை உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து தண்ணீர் வருவதால் வேகமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. காலையில் 67 அடியாக இருந்த நீரின் அளவு, மாலை 68.27அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 5 ஆயிரத்து 388 கன அடியாகவும், நீர்வரத்து 2 ஆயிரத்து 274 கன அடியாகவும் இருக்கிறது.
மதுரையின் குடிநீருக்காக 60 கன அடி மற்றும் 58ஆம் கால்வாய்க்காக 100 கன அடி வீதம் மொத்தம் 160 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், இன்றிரவு அணையின் நீர்மட்டம் 11:00 மணிக்கு 68.5 அடியை எட்டி விடும் என்பதால், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணையின் பாதுகாப்பு கருதி, 7 பெரிய மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்!