தேனி மாவட்டம் போடியில் ஐக்கிய பிள்ளைமார் சங்கத்தின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இந்தச் சிலையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (பிப். 24) திறந்துவைத்தார்.
புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், தேனி எம்பி ஓ.பி. ரவீந்திரநாத், அதிமுக நிர்வாகிகள் உள்பட அதிமுகவினர், பிள்ளைமார் சமுதாயத்தினர் ஏராளமானோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
வ.உ.சி.யின் சிலையைத் திறந்துவைத்த பிறகு சிறப்புரையாற்றுவதற்காக மேடையில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அமர்ந்திருந்தபோது, கூட்டத்தில் இருந்த இளைஞர்கள் சிலர், 'வேளாளரும் நாங்கதான்', 'வெள்ளாளரும் நாங்கதான்' எனக் கோஷங்களை எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு மேடையின் எதிரில் நின்றவர்கள் வேளாளர் பிரிவில் மாற்று சமுதாயத்தினரை இணைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து 'ஓபிஎஸ் ஒழிக' என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அவர்களை எல்லாம் கலைந்துபோகுமாறு போடி காவல் துணைக் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான காவல் துறையினர் அறிவுறுத்தியும் செல்லாததால் கோஷங்களை எழுப்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இளைஞர்களுக்கு ஆதரவாகப் பெண்களும் 'ஓபிஎஸ் ஒழிக' என்று கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றனர். இதில் வேளாளர் முன்னேற்றச் சங்க மாநில மகளிரணி தலைவி அன்னபூரணி உள்பட 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் கைதுசெய்யப்பட்டனர். இதன் காரணமாக விழாவில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: அய்யா வைகுண்டரை தரிசித்தால் ஜெயமே: 'ஜெ' வழியில் ஓபிஎஸ்!