தேனி: பெரியகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரலிங்கம் மற்றும் தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன் ஆகிய இருவரும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி சென்றனர். தென்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியகுளம் கண்மாய் பகுதியில் நள்ளிரவில் தேடிச் சென்றபோது சந்தேகப்படும் படியாக இரண்டு பேர் சுற்றித்திரிந்தனர்.
அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும், உதவி ஆய்வாளரையும், காவலரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கையில் இருந்த அரிவாளைக் கொண்டு வெட்டி விடுவதாக மிரட்டி அரிவாளைக் கொண்டு ஓங்கி வெட்ட முற்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர், பெரியகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். மேலும் காவலர்கள் வரவழைக்கப்பட்டு காவலர்களை தாக்கிய இரண்டு இளைஞர்களையும் பிடித்து தென்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெரியகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரண்டு இளைஞர்கள் மீதும் தென்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கடந்த மாதம் பெரியகுளம் தென்கரை காவல் நிலைய காவலர்கள் குற்றவாளிகளை தேடிச் சென்றபோது மது போதையில் காவலர்களை அறிவாலை கொண்டு வெட்ட முற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதேபோல் ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சட்டவிரோத செயலுக்கு பொதுமக்கள் ஆதார்கார்டை பயன்படுத்தி போலி சிம்கள் ஆக்டிவேட்: சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை!