தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை மீன் மார்க்கெட் பகுதியில் பாலமுருகன் என்பவர் புதிய டிவி, லேப்டாப் விற்பனை மற்றும் டிவி, லேப்டாப் பழுது பார்க்கும் கடையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு (ஏப்.24) வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அருகில் இருப்பவர்கள் கடை உரிமையாளருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பாலமுருகன் கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த புதிய டிவிக்கள், லேப்டாக்கள் திருடு போனது தெரியவந்தது. உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்கரை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் திருட்டில் கடையில் இருந்த 3 புதிய எல்.இ.டி டிவிக்கள், 2 லேப்டாப் மற்றும் ரூபாய் 6ஆயிரம் என மொத்தம் 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
பெரியகுளம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு மற்றும் கொள்ளைகளுக்கு காவல்துறையினர் இரவு நேரத்தில் முறையாக ரோந்து பணியில் ஈடுபடாமல் இருப்பதே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இரவு ரோந்துப் பணியினை மேற்கொண்டு கொள்ளைச் சம்பவங்கள் நடக்காமல் தடுத்திட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.