மதுரை: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருள்கள் மற்றும் வேளாண்விளைபொருள்களை மதுரைக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கு மதுரை - போடி ரயில் பாதை ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் கால ஆட்சியில் உருவாக்கப்பட்டது.
மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த, தேனி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியுடன் இப்பகுதியில் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.
மத்திய அரசு இந்தப் பணிக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த நிலையில் தற்போது அந்த பணிகள் நிறைவுபெற்றன. தண்டவாள உறுதித்தன்மை குறித்து சோதனை செய்ய பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. தற்போது மதுரை - தேனி வரை சற்றேறக்குறைய 80 கி.மீ., முழுவதுமாக பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை வருகை தரும் பிரதமர் மோடி இந்த ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். மே 27ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த ரயில் நிறுத்தங்கள் வருத்தமளிக்கிறது: இதுகுறித்து மதுரை கீழக்குயில்குடியைச் சேர்ந்த முன்னாள் அஞ்சல்துறை அதிகாரி மச்சவெள்ளை கூறுகையில், “பல்லாண்டுகளுக்குப்பின், இந்த வழியில் ரயில் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. நாகமலைப் புதுக்கோட்டை, செக்கானூரணி உள்ளிட்ட இடங்களில் எல்லாம் முன்னர் ரயில் நிறுத்தங்கள் இருந்தன. இந்த முறை அவற்றையெல்லாம் எடுத்துவிட்டது வருத்தமளிக்கிறது. நாகமலையைச் சுற்றியுள்ள கீழக்குயில்குடி, வடிவேல்கரை, புதுக்குளம், ஆலம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் இந்த ரயில் நிறுத்தத்தின் வாயிலாக பயனடைந்தன. இந்த ரயில்தான் பெரிதும் உபயோகமாக இருந்தது. நாகமலை ரயில் நிறுத்தத்தை மீண்டும் புதுப்பித்துக்கொடுத்து ரயில்கள் இங்கு நின்று செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
தொடர்ந்து இது குறித்து சாமிராஜா என்கிற விவசாயி கூறுகையில், “மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் முதல் ரயில் நிறுத்தம், நாகமலை தான். இதனைச்சுற்றி பத்துக்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் உள்ளன. ஏறக்குறைய 50ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
இவையனைத்தும் 4 கி.மீ., சுற்றளவுக்குள் உள்ளவையாகும். பூ, கீரை வகைகள் அதிகமாக விளையக்கூடிய பகுதியாகும். இதற்கு ரயில் போக்குவரத்துதான் சிறந்தது. இந்த தடத்தில் மதுரையிலிருந்து போடி வரை நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த வழியில்தான் காமராஜர் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, ஜெயராஜ் நாடார் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன” என்கிறார்.
மாணவர்களுக்கு பயன் தரும் ரயில்
ஓய்வு பெற்ற தபால்காரர் ராஜூ கூறுகையில், “12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை - தேனி ரயில் இயக்குவது மகிழ்ச்சியளிக்கிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர் மலை உள்ள காரணத்தால், நாகமலையில் ஒரு நிறுத்தம் அமைவது அவசியமாகிறது. மதுரையில் தற்போது நிலவும் சாலைப் போக்குவரத்து நெருக்கடிக்கு ரயில் போக்குவரத்து சிறந்த தீர்வாக அமையும். இங்குள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு நாகமலை நிறுத்தம் பயனுள்ளதாக அமையும்” என்கிறார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், தேனி மருத்துவக்கல்லூரி என வரிசையாக அமைந்துள்ளன. இங்கெல்லாம் பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த பாதை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயில் பாதை விவசாயிகளுக்காகவே முதன்முதலாக அமைக்கப்பட்டது. மதுரையிலிருந்து புறப்படும் தேனி ரயில் காமராஜர் பல்கலைக்கழகம் அருகேயுள்ள வடபழஞ்சியிலும் அடுத்ததாக உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்திற்கொண்டு ரயில் நிறுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கைகளையும் தாண்டி வரலாற்றுச்சிறப்புமிக்க இந்த ரயில் பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியிருப்பதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் சுதாகர், நடிகை ராதிகா நடித்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் வருகின்ற பூவரசம்பூ பூத்தாச்சு என்ற பாடல் இந்த ரயிலை அடிப்படையாகக் கொண்டதுதான்..! கதையின் நாயகன் நாயகி இருவருக்கும் காதல் தூது போகும் ரயிலாக தேனியிலிருந்து மதுரை செல்லும் இந்த ரயில்தான் காட்டப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: 11 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை - தேனி ரயில் போக்குவரத்து - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்