கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே அமைந்துள்ளது, சுருளி அருவி. கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் தினமும் ஏரளாமான சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து விட்டுச் செல்கின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலாப்பயணிகளும் சுருளி அருவிக்கு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த நிக்ஸன் குடும்பத்தினருடன் சுருளி அருவிக்குச் சென்றார். அருவியில் குளித்து முடித்த பின், சொந்த ஊருக்குப் புறப்பட்டனர். நிக்ஸனின் மகள் பெமினா (15) உள்ளிட்டோர் அருவிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். வெண்ணியாறு பாலத்தின் அருகே சென்ற போது, மரக்கிளை ஒன்று எதிர்பாராத விதமாக பெமினாவின் தலைப்பகுதியில் முறிந்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிறுமி பெமினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் சடலத்தைக் கைப்பற்றிய வனத்துறையினர், உடற்கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த போது தலையில் மரக்கிளை விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உதகை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 19 பேர் காயம்!