தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் சிறப்புமிக்கது கம்பம் அருகே உள்ள சுருளி நீர்வீழ்ச்சி. இது சுற்றுலாத்தலமாகவும், புண்ணியஸ்தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் அருவியின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளது.
கோடை காலம் துவங்கியதால், தூவானம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், சுருளி அருவிக்கு நீர் வரக்கூடிய ஊற்றுப் பகுதிகளிலும் மழை இல்லாத காரணத்தினாலும் சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து நின்றுபோனது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த கோடை மழையின் காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடையை வனத்துறையினர் இன்று முதல் விலக்கிக் கொண்டனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு சுருளி அருவியில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அருவியில் குறைந்த அளவில் தண்ணீர் வந்தாலும், கோடையை சமாளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அங்கு ஆரவாரத்துடன் குவிந்து வருகின்றனர்.