தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி உள்ளது. இந்த அருவி கொடைக்கானல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் நீர் குளிர்ச்சியாகவும், மூலிகைத் தன்மை வாய்ந்ததாக இருப்பதால் தேனி மாவட்டமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
ஆனால், ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து, ஊரடங்கில் படிப்படியாக தளர்வு ஏற்படுத்தப்பட்ட போதும் கும்பக்கரை அருவிக்கான தடை நீடித்து வந்தது.
இந்நிலையில், 11 மாதங்களாக நீடித்த தடையை நாளை முதல் விலக்கி கொள்வதாக தேவதானப்பட்டி வனத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கும்பக்கரை அருவி நாளை (பிப்.1) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.