தேனி: உத்தமபாளையம் பைபாஸ் சாலை பிரிவு அருகே நேற்று முன்தினம் (ஆக.04) இரவு வெள்ளை நிற கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தது. அதனை சோதனை செய்த காவல் துறையினர் அதிலிருந்து நாக்கு, கல்லீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளை கைப்பற்றி காரில் வந்த மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், “
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர், தன்னிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்தால் அதை பூஜை செய்து இரட்டிப்பாக்கி 5 லட்சமாக தருவதாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன்கோட்டை பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (39) என்பவரிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
அதனை உண்மை என நம்பிய அலெக்ஸ் பாண்டியன் தனது நண்பர்களான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முருகன் மற்றும் கமுதி டேவிட் பிரதாப் சிங் ஆகியோருடன் கேரள மாநிலம் வண்டிப் பெரியாறு சென்றுள்ளனர். அங்கு ஜேம்ஸ் கூறிய நபரிடம் ரூபாய் இரண்டரை லட்சத்தை கொடுத்துவிட்டு, பதிலுக்கு அவர்கள் பாட்டில்களில் தந்த பொருளை வாங்கி உத்தமபாளையம் வந்துள்ளனர். ஆனால் பேசியபடி உத்தமபாளையம் வந்ததும் ஜேம்ஸ்ஸை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால், அவர்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் நின்றிருந்தனர். அந்நேரம் காவல் துறையினரிடம் சிக்கிய போது தான் பாட்டில்களில் மாமிசம் இருந்தது தெரியவந்ததாக காவல் துறையினரிடம் பிடிபட்டவர்கள் கூறுகின்றர். இதையடுத்து உத்தமபாளையம் காவல் துறையினர், அவர்கள் அளித்த தகவலில் ஜேம்ஸ் மற்றும் அவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களை தேடி உள்ளனர். இதனிடையே கைப்பற்றப்பட்ட உடல் உறுப்புகளான நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்டவைகள் மனித உறுப்புகளா அல்லது விலங்குகளின் உறுப்புகளா என ஆய்வு செய்ய பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் உடல் உறுப்புகள் ஆட்டின் இறைச்சி எனத் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அலெக்ஸ் பாண்டியன் அளித்த புகாரில், பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறிய ஜேம்ஸ், அவருக்கு உதவியாக இருந்த உத்தமபாளையம் பாபா பக்ருதீன், பாண்டி வண்டிப் பெரியாறு பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் குற்றாலத்தில் இருந்த ஜேம்ஸ், பாபா பக்ருதீன் மற்றும் பாண்டி ஆகிய 3 நபர்களை இன்று உத்தமபாளையம் காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அலெக்ஸ் பாண்டியனை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக திட்டமிட்ட ஜேம்ஸ், அதற்காக உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாபா பக்ருதீன் அவரது நண்பரான பாண்டி மற்றும் கேரளாவைச் சேர்ந்த கோபி என்ற செல்லப்பா ஆகியோரது உதவியுடன் மோசடியை அரங்கேற்றியுள்ளார்.
இதற்காக உத்தமபாளையத்தில் உள்ள இறைச்சி கடையில் ஆட்டின் நாக்கு, கல்லீரல், மூளை ஆகிய உறுப்புகளை வாங்கி கொண்டு அலெக்ஸ் பாண்டியன் செல்வதற்கு முன் இருசக்கர வாகனத்தில் கேரளா விரைந்த பாபா பக்ருதீன், பாண்டி அங்கு கோபி என்ற செல்லப்பாவிடம் ஆட்டு உறுப்புகளை பேக்கிங் செய்த பெட்டியை கொடுத்துள்ளனர்.
பின் அங்கேயே தலைமறைவாக இருந்து அலெக்ஸ் பாண்டியன், கோபியிடம் பணம் கொடுத்தது விட்டு அவர்கள் சென்றதும் உடனடியாக அதனை கைப்பற்றிய பாபா பக்ருதீன் மற்றும் பாண்டி அதிலிருந்து 50 ஆயிரத்தை கோபியின் கமிஷனாக வழங்கி விட்டு உத்தமபாளையம் வந்துள்ளனர்.
அதோடு அலெக்ஸ் பாண்டியனை சிக்க வைக்க சந்தேகத்திற்கிணங்க கார் ஒன்று சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்கும் தகவல் அளித்தது அம்பலமானது. இதையடுத்து அவர்களிடம் இருந்து இரண்டரை லட்சம் பணத்தை மீட்ட காவல் துறையினர், மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நர்ஸ் வேடத்தில் காதலனின் மனைவியை கொல்ல முயன்ற பெண் - கேரளாவில் தான் இந்த பயங்கரம்!