சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இதில் இந்தியாவிலும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் இருமல், தும்மல் மூலம் பரவுவதால், முக்கவசம், கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட பொருள்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்தத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகக் களமிறங்கியுள்ளது மகளிர் சுய உதவிக்குழு ஒன்று.
அரசின் உதவியுடன் முகக்கவசம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர் இக்குழுவினர். தேனி மாவட்டத்தில் உள்ள 16 மகளிர் சுய உதவிக்குழுக்கள்தான் இந்தத் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர், மகளிர் திட்ட அலுவலர்களின் அறிவுறுத்தலின்பேரில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக முகக்கவசம் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுவருவதாக மாற்றுத்திறனாளி பெண் ராஜேஸ்வரி கூறுகிறார்.
துணி, எலாஸ்டிக் என இரண்டு வகையான முகக்கவசங்களை இவர்கள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் முகக்கவசங்களை காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. முகக்கவசங்களை தயாரிக்க அருகிலிருக்கும் பெண்களே வருகின்றனர். இக்குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளே.
தற்போதைய காலகட்டத்தில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றான முகக்கவசம் பெண்களால் தயார்செய்யப்பட்டு அனைத்து தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க...கழுகு பார்வையில் தேனி.!