தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் காமராஜர் பவன் எனும் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இன்று(ஜூலை 16) நடைபெற்ற அதன் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது வசந்தகுமார் எம்.பி. பேசியதாவது, "சாத்தான்குளம் விவகாரத்தில் நீதி கிடைப்பதற்கு சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். அதனடிப்படையில், சிபிஐ விசாரணைக்கு உத்திரவிட்டு அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
எனவே சாத்தான்குளம் விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 கோடி வீதம் ரூ.10 கோடி நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும்.
கரோனா வைரஸ் நோய் பாதிப்பு ஜனவரி இறுதியில் தெரிந்திருந்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக இந்திய அரசு மறைத்து லட்சம் பேர் கூடுகிற கூட்டத்தை நடத்தியது.
உலகம் முழுவதும் கரோனா நோய் பாதிப்பு ஏற்பட்ட பிறகு இந்திய அரசு தாமதமாக விழித்துக் கொண்டது. ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன் 5 முதல் 10 நாள்கள் கால அவகாசம் கொடுத்திருந்தால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கருவி வாங்குவதில் தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் தடுமாறியது. இந்தக் கால தாமதத்தினால் வைரஸ் போக்கு அதிகமானது.
எனினும் இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவலியர்கள், காவல்துறையினர் பணியாற்றி வருகிறார்கள். இருந்த போதிலும் நோய் தொற்று கட்டுக்குள் அடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஓரிரு மாதத்தில் கட்டுக்குள் வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா நடவடிக்கைகளில் அனைத்து எதிர்கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகள் மக்களிடையே பீதியை கிளப்பக் கூடாது - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்