கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக சார்பில் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அதிகமான கரோனா சோதனை செய்தது தமிழ்நாடு எனவும், தமிழ்நாடு அரசின் தீவிரமான செயல்பாடுகளால், தமிழ்நாட்டில் கரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை அடிப்படையில், கோவிட்-19 தடுப்பூசி வழங்கிட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக குறிப்பிட்ட அவர், மூன்று கோடி டோஸ் அளவிற்கான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் 51 குளிரூட்டிகள் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 47,209 தடுப்பூசி போடும் மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவம் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, தடுப்பூசி போடுவது குறித்த வழிகாட்டுதல்கள் திட்டங்களை மாநில அரசுகளுடன் மத்திய அரசு முன்கூட்டியே பகிர்ந்துகொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்த அவர், தடுப்பூசி எப்போது வழங்கப்பட்டாலும், உத்வேகத்துடனும், மிகந்த கவனத்துடனும் மக்களுக்கு வழங்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபடும் என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர்