தேனி: பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலங்கள் எவ்வித உத்தரவுமின்றி தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றும் பணியின் போது தனிப்பட்ட நபர்களின் கணினி சிட்டாவில் தாக்கலாகியுள்ளது.
தமிழ் நிலம் மென்பொருளில் சக்திவேல் நில அளவரின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு, மண்டலத் துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்கள் பரிந்துரை செய்த பின்பு, வருவாய் கோட்டாட்சியர்களால் கணினி வழியே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
இதற்கு தமிழ் நிலம் மென்பொருளில் தொடர்பில்லாத ஓர் உத்தரவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதில் தொடர்புடைய பெரியகுளம் நில அலுவலர் சக்திவேல், மண்டலத் துணை வட்டாட்சியர் மோகன்ராம், பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தினமாலா உள்ளிட்டோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவில் 409, 465, 466 உள்பட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தரிசு காடு என்ற வகைப்பாடு கொண்ட நிலம் மற்றும் அரசு புறம்போக்கு தரிசு நிலங்கள் எவ்வித உத்தரவுமின்றி தமிழ் நிலம் மென்பொருளில் பதிவேற்றும் பணியின் போது தனிப்பட்ட நபர்களின் கணினிச் சிட்டாவில் தாக்கலாகியுள்ளது.
நில அபகரிப்பு வழக்கு
தமிழ் நிலம் மென்பொருளில் பிச்சை மணி, நில அளவர் மற்றும் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொண்டு பதிவேற்றம் செய்யப்பட்டு மண்டலத் துணை வட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களால் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, வருவாய் கோட்டாட்சியர்களால் கணினி வழியே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய பெரியகுளம் நில அளவர் பிச்சைமணி, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், மண்டலத் துணை வட்டாட்சியர் மோகன்ராம், மண்டலத் துணை வட்டாட்சியர் சஞ்ஜீவ் காந்தி, பெரியகுளம் வட்டாட்சியர்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், வருவாய் கோட்டாட்சியர் ஆனந்தி, ஜெயபிரதா, அண்ணபிரகாஷ், மற்றும் பல தனி நபர்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலங்களின் மதிப்பு பல கோடி ரூபாய். மேலும், கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் வட்டாட்சியர் வரை பல்வேறு நிலைகளில் உள்ள அரசு அலுவலர்கள் மற்றும் தனி நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதால், தேனி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்குகளை விசாரணை செய்வதற்காக சிபிசிஐடிக்கு வழக்கினை மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நஷ்டத்தில் இயங்கினாலும் போக்குவரத்து துறையை அரசு தொடர்ந்து இயக்கி வருகிறது: அமைச்சர் ராஜகண்ணப்பன்