மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் தேசிய அளவில் நான்காம் இடமும், தமிழகத்தில் முதலாவது இடத்தையும் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் பிடித்துள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள 15,579 காவல் நிலையங்களில் நேரடியாக ஆய்வு செய்தது. இதில் காவல் நிலையத்தின் தூய்மை, புகார் கொடுக்க வரும் மக்களை காவலர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதில் தொடங்கி புகாருக்கான தேர்வு வரை அனைத்தையும் ஆய்வு செய்து நாடு முழுவதும் 10சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் நான்காம் இடம் பிடித்து, தமிழகத்திற்கும், தேனி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் ஒவ்வொருவர் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தில் ஒரு ஆய்வாளர், மூன்று சார்பு ஆய்வாளர்கள், 4 தலைமை காவலர்கள், 7 கிரேட் ஒன் காவலர்கள், 12 காவலர்கள் என மொத்தம் 27 நபர்களை உள்ளனர். தேனி, பெரியகுளம் ஆகிய இரு காவல் உட்கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட வழக்குகள் இந்த காவல் நிலையத்தில் விசாரிக்கப்படும்.
இது குறித்து தேனி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் மங்கையர்திலகம் கூறுகையில், உயர் அதிகாரிகளின் அறிவுரையின்படி செயல்பட்டதால் தான் இந்த சிறப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. காவல் நிலையத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தான் இதற்கு காரணம்.
எங்கள் காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கென தனியாக நட்புறவு அறை உள்ளது. பெண்களுக்கென கலந்துரையாட தனி அறை உள்ளது. அதே போல ஓய்வு அறை, காத்திருப்போர் அறை, இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம், மழைநீர் சேகரிப்புத் தொட்டி என அனைத்தையும் சரியாக வைத்து இருக்கிறோம். அதனால்தான் இவ்வளவு பெரிய அங்கீகாரம் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி என்றார்.
கடந்த ஆண்டு தேசிய அளவில் வெளியிடப்பட்ட சிறந்த காவல் நிலையங்களின் பட்டியலில் தேனி பெரியகுளம் வடகரை காவல் நிலையம் 8ஆம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.