தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வெள்ளைப் பூண்டு சந்தைக்கு ஏப்ரல் 19ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஈரோட்டிலிருந்து வெள்ளைப் பூண்டு ஏற்றி வந்துள்ளார். இதனையடுத்து அண்மையில் அந்த லாரி ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரிடம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வடுகபட்டியில் உள்ள வெள்ளைப் பூண்டு கமிஷன் மண்டி உரிமையாளர், தொழிலாளர்கள் என 20 நபர்களுக்கு மேல்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் பூண்டு சந்தையும் நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்நிலையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் அனுப்பிவைக்கப்பட்டு இன்று(மே 2) முடிவு வெளியானது. பரிசோதனை முடிவில் பரிசோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனால் வடுகபட்டி பொதுமக்கள், வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.