தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியானது மாவட்டத்தின் முக்கியச் சுற்றுலாத் தளமாகும். மேகமலை வன உயிரின சரணாலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாள்களில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்துசெல்வதுண்டு.
விசேஷ நாள்களில் பொதுமக்கள் பயனடையும் வகையில், சமையல் மற்றும் உணவுக் கூடத்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கம்பம் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் ரமேஷ் என்பவர் தனது சொந்த நிதியில் ரூ.6 லட்சம் செலவில் கட்டித் தந்துள்ளார். இதற்காக அந்தச் சமையல் கூடத்தின் சுவரில் கல்வெட்டும் வைத்துள்ளார்.
இந்நிலையில் தன்னார்வலர் சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றிய கம்பம் கிழக்கு சரக வனத் துறையினர் புதிதாக சமையல் மற்றும் உணவருந்தும் கூடம் கட்டியதாகப் பொய்க் கணக்கு எழுதி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக மேகமலை வன உயிரின சரணாலய உதவி வனப்பாதுகாவலர் குகனேஷ், கம்பம் கிழக்கு வனத் துறையினர், தன்னார்வலர் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இதில் வனவர் திலகர் முறைகேட்டில் ஈடுபட்டு ஐந்து லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் நிதி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து திலகரைப் பணியிடை நீக்கம்செய்து மேகமலை வன உயிரின சரணாலய காப்பளர் சச்சின் துக்காராம் போஸ்லே உத்தரவிட்டார். மேலும் இதுபோன்று சுருளி அருவியில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா எனத் தொடர்ந்து விசாரணை நடத்திடவும் உத்திரவிடப்பட்டது.
இதையும் படிங்க...நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.1,137 கோடி மோசடி - 4 பேர் கைது!