வேலூரில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் ஆண்டிபட்டியிலும் அமமுக அலுவலகத்தில் பணம் கைப்பற்றப்பட்டதால் அந்த தொகுதிக்கும் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜரிஷி தேவ் நேற்று தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவிடம் அளித்த மனுவில், ‘‘தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் தேர்தல் விதிமுறைகளை மீறி ஆரத்தி எடுக்க ரூ.500, ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 என பணம் பட்டுவாடா செய்துள்ளார்.
இது தேனி தொகுதி தேர்தல் அதிகாரிகள் கவனத்திற்கு செல்லவில்லையா அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என தெரியவில்லை. ஜனநாயக முறையில் தேனி தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. எனவே அங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.