தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்குள்பட்டது உப்புக்கோட்டை ஊராட்சி. போடந்திராபுரம், உப்புக்கோட்டை, குண்டல் நாயக்கன்பட்டி, பாலார்பட்டி ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த 12 வார்டுகளை உள்ளடக்கியது இந்த ஊராட்சி.
வாக்குச்சீட்டில் இடம்பெறாத சின்னம்
இந்நிலையில் இவ்வூராட்சியில் உள்ள எட்டாவது வார்டு கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அருண்குமார், செல்லப்பாண்டி, சிவக்குமார், ராஜு ஆகிய நான்கு பேர் போட்டியிட்டுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் முறையே திறவுகோல், சீப்பு, கட்டில், கார் ஆகிய சின்னங்கள்ஒதுக்கப்பட்டன.
இதற்கான தேர்தல் உப்புக்கோட்டை பச்சையப்பா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கார் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ராஜு (54) என்பவரின் சின்னம், பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரை சந்தித்த வேட்பாளர் ராஜு வாக்குச்சீட்டில் தனது பெயர், சின்னம் இடம்பெறாமல் நடைபெற்ற வாக்குப்பதிவை ரத்துசெய்து, மீண்டும் மறுதேர்தல் நடத்திட வேண்டும் என்று புகார் அளித்தார்.
மறுதேர்தல் பரிந்துரை
அதனடிப்படையில் வாக்குச்சாவடி அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் வருவாய்த் துறை அலுவலர்கள் நடத்திய விசாரணையில், குளறுபடி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட எட்டாவது வார்டிற்கு மட்டும் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து வேட்பாளர் ராஜு கூறுகையில், "காலையில் வாக்களித்தபோது ஒன்றிய கவுன்சிலருக்காக கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டில் கார் சின்னம் இருந்ததை எனது சின்னமாக கருதி வாக்களித்தேன்.
பிறகுதான் எனது மனைவி, உறவினர்களுக்கு வார்டு உறுப்பினருக்கான வாக்குச்சீட்டில் கார் சின்னம் இடம்பெறாதது தெரியவந்தது. இந்த விவரம் மாலை 3 மணிக்கு மேல் தெரியவந்ததால் உடனடியாக சரிசெய்ய இயலவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். அதன் பிறகுதான் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தேன்" என்றார்.
8ஆவது வார்டுக்கு மட்டும்
இவர் இதற்கு முன் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 99 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் உள்ள வேட்பாளரின் பெயர், சின்னம் வாக்குச்சீட்டில் இடம்பெறாமல் நடைபெற்ற வாக்குப்பதிவால் உப்புக்கோட்டை ஊராட்சி எட்டாவது வார்டிற்கு மட்டும் மறுதேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்க: தேர்தல் வீதிமுறையை மீறி அதிமுக பணப்பட்டுவாடா