கரோனா நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகந ஒரு சில பணிகளுக்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் பொதுமக்கள் மொபைல் போனில் பெறப்பட்ட அனுமதியுடன்தான் செல்ல வேண்டும் என்று மாவட்ட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக தளர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் தேனி மாவட்டத்தில் நோய்த்தொற்று முழுமையாக கட்டுக்குள் இல்லாததால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வரக்கூடாது. சுயகட்டுப்பாட்டுடன், தகுந்த இடைவெளியை பின்பற்றி தொடர்ந்து நோய் தொற்றுகளை தடுக்கும் விதத்தில் இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் முறையான அனுமதியுடன் மட்டுமே வெளியில் வரவேண்டும்.
இதற்காக PAP (Public Access Pass) எனும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு 94 88 05 66 00 என்ற எண்ணிற்கு SMS அனுப்பினால் 3 மணி நேர கால அளவிற்கு அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது இதனை எளிமைப்படுத்தும் விதமாக பொதுமக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்லும் முன்னர் அவர்களுடைய மொபைல் போனிலிருந்து 08045936055 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் PAP அனுமதி எண் மற்றும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கால அளவு ஆகியவை உடனடியாக அவர்களுடைய மொபைல் போனிற்கு SMS மூலம் கிடைக்கும்.
இத்திட்டம் ஏற்கனவே தேனி மாவட்ட ஆட்சியரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி அனுமதியானது ஒரு மொபைல் போனிற்கு மூன்று நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பொது மக்கள் வெளியில் வரும்போது வாகன தணிக்கையில் இருக்கும் காவலர்கள் கேட்கும்பட்சத்தில் கண்டிப்பாக அனுமதி கிடைத்த SMS காண்பிக்க வேண்டும். இவ்வாறான அனுமதியின்றி வெளியில் இருக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
'எல்லைப் பகுதிகளில் தேவையின்றி வருவோரை திருப்பி அனுப்ப வேண்டும்'