அனைத்து ஓ.பி.சி, சீர்மரபினர் சமுதாயத்தினர் சார்பில், தேனி மாவட்டம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற்று வருகின்றது. இதில், 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி வகுப்பையும் சேர்க்க வேண்டும், மருத்துவ சேர்க்கையில் ஓ.பி.சி மக்களுக்கு சட்டப்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், 2021 சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் ஓ.பி.சி பிரிவையும், சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், 2011 சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.
போராட்டமானது தேவதானப்பட்டி, என்டப்புளி, பொம்மையகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி, போடி, கம்பம் உள்பட மாவட்டத்தில் 80 இடங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இது குறித்து சீர்மரபினர் சமுதாயத்தினர் கூறுகையில், “ஓ.பி.சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாவிட்டால் வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் எதிராக செயல்பட்டு அவரை தோற்கடிப்போம்” எனத் தெரிவித்தனர்.