கரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசியப் பொருள் விற்பனையகங்கள், உணவகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். தற்போது நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் நிபந்தனையுடன் கடைகள் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் நோய்த் தொற்று அதிகம் கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள உணவகங்கள், தனிக்கடைகளை திறந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேனி மாவட்டம் தேனி – அல்லிநகரம் நகராட்சியில் 7, 10 ஆகிய வார்டுகள், போடி நகராட்சியில் 2, 31 ஆகிய வார்டுகள், சின்னமனூர் நகராட்சியில் 26வது வார்டு, ஆண்டிபட்டி தாலுகாவில் இராஜகோபலன்பட்டி ஊராட்சி, பெரியகுளம் தாலுகாவில் உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி, ஜெயமங்கலம் ஊராட்சி, கெங்குவார்பட்டி பேரூராட்சி, உத்தமபாளையம் தாலுகாவில் லட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சி, ஓடைப்பட்டி பேரூராட்சி, உத்தமபாளையம் பேரூராட்சி, ஆகிய கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள உணவகங்கள், தனிக்கடைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நேரக்கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி கிடையாது. பார்சல் வழங்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.