கடந்த சில நாட்களாக காய்ச்சல், உடல்சோர்வு உள்ளிட்டப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
உடல்நலமின்மை காரணாக, கடந்த 3 நாட்களாக ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை தராத நிலையில், நேற்று(ஜனவரி 20) ஆட்சியருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில், பணிகள் மேற்கொள்ள இருந்த நிலையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது இன்று(ஜனவரி 21) உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா தனிமைப்படுத்தப்பட்டப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியருக்கு சிகிச்சைக்கு முன்பாக சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டு, அதன் பின்னர் வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் வகையில் ஆட்சியர் தனது உடைமைகளுடன் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது குறித்தும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் வரையில் ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் தங்கி சிகிச்சைப் பெறுவார் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியருடன் கடந்த சில நாட்களாகப் பணிபுரிந்து வந்த அரசு அலுவலர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஜனவரி 15, 16 ஆகிய இரு தேதிகளில் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு அரசு விழாக்களில் ஆட்சியருடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.