தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள இராஜாக்காள்பட்டி ஊராட்சிக்குட்பட்டது கதிர்வேல்புரம் கிராமம். வேலப்பர் கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதியில், 31 குடும்பங்களைச் சேர்ந்த 93 பளியர் இன பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர்.
பளியர் இன மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டும், அப்பகுதிகளில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று (நவ.17) அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், அப்பகுதியில் உள்ள பழுதடைந்த வீடுகளை பார்வையிட்டு, அதனை சரி செய்வதற்கும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி வழங்கிடவும், அடிப்படை வசதிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பளியர் இன மக்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அப் பழங்குடியின மக்களுக்கான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதன்படி, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின்படி, மலைப்பகுதிகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் தலா ரூ.33,000 மதிப்பீட்டில், ஒரு குடும்பத்திற்கு 10 ஆடுகள் வீதம், ரூ.8.58 இலட்சம் மதிப்பீட்டில் 26 பயனாளிகளுக்கும், தலா ரூ.6,000 மதிப்பீட்டில், ஒரு குடும்பத்திற்கு 30 கோழிகள் வீதம், ரூ.1.56 இலட்சம் மதிப்பீட்டில் 26 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தலா ரூ.8,000 மதிப்பீட்டில், ஒரு குடும்பத்திற்கு 5 தேனீ வளர்ப்பு பெட்டிகள், ரூ.2.08 இலட்சம் மதிப்பீட்டில் 26 பயனாளிகளுக்கும், 13 பயனாளிகளுக்கு ரூ.1.04 இலட்சம் மதிப்பீட்டில் தேன் எடுக்கும் கருவிகள் வழங்கப்பட்டன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.35 இலட்சம் மதிப்பீட்டில், 15 பயனாளிகளுக்கு ரூ.50.26 இலட்சம் மதிப்பீட்டிலும், தனி நபர் இல்ல கழிப்பறை அமைப்பதற்கென தலா ரூ.12,000 மதிப்பீட்டில், 15 பயனாளிகளுக்கு ரூ.1.80 இலட்சம் மதிப்பீட்டிலும், 5 பயனாளிகளுக்கு ரூ.7,500 மதிப்பீட்டிலான தார் பாய்களும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் தலா ரூ.1.00 இலட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது.
இது தவிர 3 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும், 74 பயனாளிகளுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ்கள், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு 'அந்தியோதயா அன்னயோஜனா' திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி பெறுவதற்கான அட்டையும், 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நல வாரிய அட்டையும் வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி சுற்றுச்சுவர் ரூ.3.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பணிக்கான ஆணை மற்றும் ரூ.8.61 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைப்பதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் உடல் நலத்தினை கருத்தில் கொண்டு, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திருச்சியில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா; அடர்வனக்காடு உருவாக்க முயற்சி!