இந்தியர்களின் பழங்கால நினைவலைகளில் மறக்கமுடியாத ஒன்றாகத் திகழ்வது அம்பாசிடர் கார். ஒரு காலகட்டத்தில் அம்பாசிடர் கார் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்தியாவின் அரசுத் துறை உயர் அலுவலர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள் என அனைவரும் அம்பாசிடர் காரை பெரும்பாலும் பயன்படுத்திவந்தனர்.
அம்பாசிடர் கார் வைத்திருந்தால் முந்தைய காலகட்டத்தில் சமுதாயத்தில் பெரும் கவுரவமாகக் கருதப்பட்டது. அம்பாசிடர் கார் தயாரிப்பு நிறுவனம் தனது தயாரிப்பை நிறுத்திய பின்பு அம்பாசிடர் கார் பெரும்பாலும் ஒரு காட்சிப் பொருளாகவே காணத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் உள்ள அம்பாசிடர் ஃபேன்ஸ் கிளப் என்ற அமைப்பினர், பொதுமக்கள் பார்வைக்காக கொச்சியிலிருந்து தேக்கடி வரை அம்பாசிடர் கார்களில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி, கொச்சியில் தொடங்கி குட்டிக்காணம், பீர்மேடு பகுதிகள் வழியாக தேக்கடி வரை பொதுமக்கள் பார்வைக்காக இந்த ஊர்வலத்தை நடத்தினர்.
இந்த ஊர்வலத்தில் 1958, 1964, 1969, 1970, 1980ஆம் ஆண்டு மாடல் அம்பாசிடர் கார்களில் தங்களது குடும்பத்துடன் ஊர்வலமாக வந்தனர். இவர்கள் வரும் வழியெங்கும் இவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்டது. நிறைவாக கேரள மாநில சுற்றுலாத் தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற சர்வதேச சுற்றுலாத் தலமாக உள்ள தேக்கடியில், தேக்கடி சுற்றுலாக் கழகத்தின் சார்பாக இவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தின் மூலமாக அம்பாசிடர் கார் குறித்தும் அதன் பாதுகாப்பு சொகுசு உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ளும்விதமாக பொதுமக்களுக்கு விளக்கவுரையும் அளிக்கப்பட்டது.
சுற்றுலாத் தலங்களுக்கு பழங்கால அம்பாசிடர் கார்கள் மூலமாகச் சென்று சுற்றிப்பார்ப்பதன் மூலம் சுற்றுலாத் தலங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் இவ்வகையான ஊர்வலம் நடத்தப்பட்டதாக அம்பாசிடர் ஃபேன்ஸ் கிளப் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
பழமையான அம்பாசிடர் கார்கள் வரும் வழியெங்கும் ஏராளமான பொதுமக்கள் அதனை ஆச்சரியமாகப் பார்த்ததுடன் மட்டுமல்லாமல் அவர்களது செல்ஃபோன்களில் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க:
உ.பி.யில் பயங்கரம்: காவலர்கள் வேடத்தில் சென்று பாலியல் வன்கொடுமை