தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனைத் தெருவில் வசித்துவருபவர் கருணாகரன் (73). தேனி மாவட்ட சுகாதாரத் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர் தற்போது குழந்தைகள் நல மருத்துவராகச் செயல்பட்டுவருகின்றார்.
கடந்த 8ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்த கருணாகரனின் வீடு திறக்கப்பட்டிருப்பதாக அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் நேற்று வந்து அவர் பார்க்கையில், வீட்டின் கதவு, பீரோக்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
பின்னர் வீட்டிலிருந்த தங்கம், வைரம், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் தடயவியல் வல்லுநர்கள் உதவியுடன் குற்றவாளிகளுக்கு எதிராக முக்கிய ஆதாரங்களைச் சேகரித்தனர்.
மேலும் பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி கொள்ளையர்களைப் பிடிப்பதற்குத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
20.5 சவரன் எடையுள்ள வைரக்கம்மல், தங்க மோதிரம், காசுகள், செயின், கம்மல், எல்.இ.டி. தொலைக்காட்சி, மடிக்கணினி, வளையலுடன் கூடிய கடிகாரம், ரொக்கப்பணம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பெரியகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.