தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த நபர் திடீரென்று உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த சுகாதாரத் துறையினர், சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு தற்போது ஆம்புலன்ஸ் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், கடந்த இரண்டு நாள்களாக அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் வராததால் தொற்று பாதித்தவர் வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவரது வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லாததால், பெரும் சிரமத்தைச் சந்தித்துவந்துள்ளார். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரும்போது, தொற்று பரவும் அச்சத்தால் ஊர் மக்கள் அவர்களை எதிர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை மையத்திற்கு இன்று அழைத்துச் செல்வதாக பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் தெரிவித்த சுகாதாரத் துறையினர், கொடுவிலார்பட்டி பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அங்குவந்த நபரைக் கண்ட ஊர் மக்கள் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
பல மணி நேரமாகக் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் ஏதும் வராததால், ஊர் மக்களே அந்நபரை ஆட்டோவில் ஏற்றி கொடுவிலார்பட்டி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வதில் காலதாமதம் செய்த சுகாதாரத் துறையினரின் அலட்சியத்தால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.